வெளிப்பாட்டின் தொடர் நிகழ்வு (தொடர்ச்சி)
அவரது அரச புகழுரையில், “கடவுளே எல்லாமாவார், அனைத்துமாவர். எல்லா தொடக்கத்தின் பின்னால் இருக்கின்ற சக்தி அவரே. . . .அவரது குரலே நம்முள் இருந்து நல்லதையும் தீயதையும் நமக்குக் காண்பிக்கின்றது. ஆனால், நாம் பெரும்பாலும் அக்குரலை அலட்சியம் செய்திடுகின்றோம் அல்லது தவறாகப் புரிந்துகொள்கின்றோம். ஆகவே, அவரது வார்த்தையை, அவரது உண்மையான விளக்கத்தை தெளிவுபடுத்த இப்பூமியில் வாழும் நம் மத்தியில் அவதரிக்கச் செய்ய ஒருவரை அவர் தேர்வு செய்கின்றார். எனவே, மனிதனுக்குக் காலந்தோறும் இப்பூமியில் இறைவனின் குரலைக் கேட்கச் செய்திட, உண்மைக் கடவுளின் உள்ளமை குறித்த தன் புரிந்துணர்வைக் கூர்மையாக்கிட இயேசு, முகமது, பஹாவுல்லா போன்ற இறைத்தூதர்கள் அவனுக்குத் தேவை. நமக்கு அனுப்பி வைக்கப்படும் அக்குரல்களை நமது பௌதீக காதுகளால் செவிமடுக்கவும் புரிந்துகொள்ளவும் அவை மனித உடலில் வெளிப்பட வேண்டும்.”
கடவுளின் ஒட்டுமொத்த இறைத்தூதர்களிடையே நபிகள் நாயகத்துக்கு இருக்கின்ற உயரிய ஸ்தானத்தை பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர்களுடைய அங்கீகாரம் எந்த அளவுக்கு உறுதிப்படுத்துகின்றது என்பதற்கு இதைவிட உயரிய சான்று, பாரசீக அல்லது துருக்கியின் மதகுருக்களுக்கு வேறென்ன தேவைப்படுகிறது? இஸ்லாம் சமயத்திற்கு இதைவிட வேறென்ன சேவையை நாங்கள் வழங்கிட வேண்டுமென இம்மதகுருக்கள் எதிர்பார்க்கின்றனர்? அவர்களால் எட்டப்பட முடியாத நிலையில், இறைத்தூதரின் குரல் எழுப்பியுள்ள உண்மையின்பால், கடவுளால் வழங்கப்பட்ட திருப்பணியினை அரசியார் இத்துணை வெளிப்படையாக எழுத்துப்பூர்வமாக ஏற்ற, வரலாற்று சிறப்புமிக்க ஓர் உறுதியான மற்றும் நேர்மையான நிலைமாற்றமெனும் சுடரினை ஏற்றிவைத்திட்ட எங்களின் திறமைக்கு இதைவிட மேலான சாட்சியம் வேறென்ன அவர்கள் கோரமுடியும்? யூதர்கள், ஜோரோஸ்தர்கள், இந்துக்கள், புத்த சமயத்தினர், மிகப்பழமையான சமயங்களின் நம்பிக்கையாளர்கள், உலோகாயவாதிகள் மற்றும் நாத்திகர்கள் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவம் இரண்டின் தெய்வீக மூலத்தையும் முகமது மற்றும் இயேசு நாதரின் இறைத்தூதர் பணிகளையும் இஸ்லாமிய மதகுரு ஸ்தாபனத்தின் சட்டப்பூர்வத்தையும் திருத்தூதரின் இளவரசர் புனித பீட்டர் அவர்களின் குருபீடத்தையும் மனப்பூர்வமாகவும் கேள்விக்கிடமற்ற முறையிலும் அவர்கள் ஏற்பதே பஹாய் குழுமத்தில் அவர்கள் நுழைவதற்கான முன்நிபந்தனையாகும். பஹாவுல்லாவின் சமயம் அங்கீகரித்திடுவதில் பெருமை, அதன் போதகர்களின் பிரகடனம், அதன் மன்னிப்புக்கோருவோரின் தற்காப்பு, அதன் நூல்களின் பரப்புரை அதன் கோடைகாலப் பள்ளிகளில் அளிக்கப்படும் விளக்கம் மற்றும் எல்லா நிலைகளிலுமுள்ள அதன் நம்பிக்கையளர்கள் சொற்களாலும் செயல்களாலும் ஏற்படுத்திடும் சான்று ஆகியவையே பஹாய் நம்பிக்கையெனும் அடிதளத்தின் உறுதியான மாற்ற இயலாத கோட்பாடுகளாக இருக்கின்றன.
- வாக்களிக்கப்பட்ட நாள் வந்துவிட்டது, ஷோகி எஃபெண்டியால் எழுதப்பட்டது, பக்.108
கிருஸ்தவர், முஸ்லிம் அல்லது தங்கள் தொழிலுக்கு ஒத்த நடத்தையையும் தாங்கள் வகிக்கின்ற பதவிக்கு தகுதியானவருமான வேறெந்த பிரிவினரான உலக சமய தலைவர்களை இழிவுபடுத்தவோ அவர்களது அந்தஸ்தை சிறுமைப்படுத்தவோ பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர்கள் ஒரு கணப்பொழுதேனும் சிந்தித்ததில்லை. “…அறிவு எனும் ஆபரணத்தாலும் நற்பண்புகளாலும் உண்மையாகவே அலங்கரிக்கப்பட்டுள்ள அந்த சமய அறிஞர்கள் மெய்யாகவே உலகமெனும் உடலின் தலையும் நாடுகளின் கண்களுமாவர். எல்லா காலத்திலும் மனிதனுக்கான வழிகாட்டுதல் இந்த ஆசீர்வதிக்கப்பெற்ற ஆன்மாக்களையே சார்ந்துள்ளதென,” பஹாவுல்லா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்: “நேர்மையான நடத்தையைக் கொண்ட சமய அறிஞர் மற்றும் நீதியான ஞானிகள் உலகமெனும் உடலுக்கு ஆவியைப் போன்றவர்களாவர். எவரது தலை நீதி எனும் மகுடம் சூட்டப்பட்டுள்ளதோ எவரது உடல் நடுநிலைமை எனும் ஆபரணத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோ அந்த ஞானிக்கு நலம் உண்டாகுமாக.” இன்னும் சொல்ல வேண்டுமாயின்: “ ஒப்புயர்வற்ற ஆணையிடுபவரான அவரது நாமத்தின் பெயரால், அதி புனித மதுரசத்தினைக் கைப்பற்றி ஒரே வீச்சில் பருகிட்ட அந்த சமய அறிஞர் உலகத்தின் ஒரு கண் ஆவார். அவருக்குக் கீழ்ப்படிந்து அவரை நினைவிற்கொள்ளும் அவர்களுக்கு நலம் உண்டாகுமாக.” பிரிதொரு சூழலில்,“அவருக்கும் அனைத்து அறிவுக்கும் காரணமாய் இருந்திடும் அந்த ஒருவர்க்கும் இடையே அறிவு ஒரு தடையாக இருப்பதை அனுமதித்திடாத, சுய-ஜீவியானவர் தோன்றியதும் பிரகாசமான முகத்துடன் அவர்பால் திரும்பிய அந்த சமய அறிஞருக்கான ஆசீர்வாதம் அபரிமிதமானது. அவர், உண்மையிலேயே, கற்றோர் மத்தியில் கணக்கிடப்படுவார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவர்க்கவாசிகள் அவரது மூச்சுக்காற்றின் ஆசீர்வாதத்தினைத் தேடிடுவர். அவரது விளக்கு விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள அனைவர் மீதும் அதன் சுடரொளியினை விழச்செய்திடும். அவரைக் காண்பவன், மெய்யாகவே அந்த உண்மையான ஒருவரைக் கண்ணுற்றவனாவான். அவர்பால் திரும்புகின்றவன்,மெய்யாகவே, எல்லாம் வல்ல, சர்வ-விவேகியான கடவுளின்பால் திரும்பியவனாவான். எவரது நடவடிக்கைகள் அவர்கொண்ட அறிவுக்கிணங்க இருக்கிறதோ, எவர் இறைவனின் நிரந்தர விதியைக் கடைப்பிடிப்பதுடன் திருநூலில் இறைவன் விதித்துள்ள கட்டளைக்கிணங்க ஆணையிடுகிறாரோ அந்த சமய அறிஞர்களை நீங்கள் மதித்திடுங்கள்,” என அவர் அறிவுறுத்துகிறார். “மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் இருக்கின்ற வழிகாட்டும் விளக்குகள் அவர்கள்தான் என்பதை நீங்கள் அறிந்திடுவீராக. தங்கள் சமய அறிஞர்களின் ஸ்தானம் மற்றும் தகுதியினை மதிக்கத் தெரியாதவர்கள், மெய்யாகவே, அவர்களுக்காக இறைவன் அருளிய ஆசீர்வாதத்தினை திசைதிருப்பியவராவர்.”
- வாக்களிக்கப்பட்ட நாள் வந்துவிட்டது, ஷோகி எஃபெண்டியால் எழுதப்பட்டது, பக்.108)
ஆயினும், எவரும் எனது நோக்கத்தினைத் தவறாகப் புரிந்துகொள்ளவோ பஹாவுல்லாவுடைய சமயத்தின் சாரமான இந்த அடிப்படை உண்மையைத் திரித்துக்கூறவோ கூடாது. பாப் அவர்களின் வெளிப்பாட்டிற்கு முன்னர் தோன்றிய இரு மாபெரும் அவதாரங்களான இயேசுநாதர் மற்றும் நபிகள் நாயகம் உட்பட கடவுளின் அனைத்துத் தீர்க்கதரிசிகளின் தெய்வீகத் தோற்றுவாய் சந்தேகத்திற்கிடமில்லாமலும் அசைக்க இயலாதவகையிலும் பஹாய் சமய நம்பிக்கையாளர்களால் நிலைப்படுத்தப்படுகிறது. இந்த இறைத்தூதர்களின் அடிப்படை ஒற்றுமை தெளிவாக அங்கீகரிக்கப்படுகிறது, அவர்களது வெளிப்பாட்டின் தொடர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது, அவர்களது புனித நூல்களுக்கு கடவுளால் வழங்கப்பட்டுள்ள அதிகாரமும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாயிருக்கும் தன்மையும் ஒப்புக்கொள்ளப்படுகிறது, அவர்களின் இலக்கு மற்றும் குறிக்கோளின் ஒற்றுமை பிரகடனப்படுத்தப்படுகிறது, அவர்களின் செல்வாக்கின் தனித்தன்மை வலியுறுத்தப்படுகிறது, அவர்களின் போதனைகள் மற்றும் நம்பிக்கையாளரின் இறுதி சமரச இணக்கம் கற்பிக்கப்பட்டு எதிர்பார்க்கப்படுகிறது. பஹாவுல்லா, “அவர்கள் அனைவரும் அதே கூடாரத்தினுள் வாழ்ந்து, அதே சுவர்க்கத்தில் சிறகடித்து, அதே சிம்மாசனத்தில் அமர்ந்து, அதே உரையினை வெளிப்படுத்தி, அதே சமயத்தினைப் பிரகடனப்படுத்துகின்றனர்,” என நற்சான்று வழங்கியுள்ளார்.