உலக சமயங்களில் ஆகக் கடைசியானது

பஹாய்கள் கடவுளின் ஒருமையில் நம்பிக்கைகொள்கின்றனர். இந்த நம்பிக்கைதான், “கடந்தகாலத்தில் நித்தியமானதும் எதிர்காலத்திலும் நித்தியமானதுமான, கடவுளின் மாற்றமில்லா சமயமான,” அந்த சமயத்தின் ஒருமையில் நம்பிக்கைகொள்ள அவர்களைத் தூண்டுகிறது. இவ்வகையில், பஹாய் சமயம் கடந்தகால சமயங்கள் அனைத்துடனும் உறவு கொண்டுள்ளது. இருப்பினும், அதன் வேர், அதற்கு முன்னர் வந்த இஸ்லாம் சமயத்தில் இருக்கின்றது. இந்த உறவுக்கான ஒப்புவமை கிருஸ்துவ சமயத்திற்கும் யூத சமயத்திற்கும் இடையே இருப்பது போன்றாகும். சில வேளைகளில் இது, பஹாய் சமயம் இஸ்லாம் சமயத்தின் ஒரு பிரிவு என தப்பாகப் புரிந்துகொள்ள வழிவகுத்திடுகின்றது.

மேலும் தொடர்வதற்குமுன், பஹாய் சமயம் எந்தவித ஐயமும் தயக்கமும் இன்றி, இஸ்லாத்தின் தெய்வீகத் தன்மையை உறுதிபடுத்துகிறது என்பது குறிப்பிடப்பட வேண்டும். தூய்மையான மற்றும் மாற்றம் ஏற்படுத்தபடாத புனித திருக்குர்’ஆன் இறைவனின் வெளிப்பாடு என்பதையும் முகமது நபி கடவுளின் ஊழியர், இறைத்தூதர் மற்றும் தீர்க்கதரிசிகளின் முத்திரையானவர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு சமய மற்றும் இன பின்னணியிலிருந்தும் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொள்ளும் மக்கள் இந்த நம்பிக்கையையும் ஏற்கின்றனர்.

இருப்பினும் பஹாய் சமயம், தனக்கென சொந்த ஸ்தாபகரையும் (பஹாவுல்லாவையும்) சொந்த புனித நூலையும் சொந்த சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளையும் கொண்டுள்ளது.


புதிய சமயத்தின் சுதந்திரத்தன்மை குறித்து முதன்முதலாக (பஹாய் சமய முன்னோடி) பாப் அவர்களின் நம்பிக்கையாளர் குழுவினரால் ஈரானின் வடகிழக்கில், படாஷ்ட் எனும் குக்கிராமத்தில்1848ல் நடந்தேறிய படாஷ்ட் மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது.

இப்புதிய சமயம் தொடக்கத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்த நாடுகளில் பரவியதால், அதன் பெரும்பாலான நம்பிக்கையாளர்கள் தங்களின் முஸ்லிம் உறவினர் மற்றும் நண்பர்களோடு தங்கள் உறவினை வலுவாகவே வைத்திருந்தனர். ஆயினும், அந்நாடுகளில் பஹாய் சட்டங்களுக்கிணங்க திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டபோது எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது. இந்த எதிர்ப்பினால், மற்ற சமயத்தைச் சார்ந்தவர்களுக்குச் சொந்தமான இடுகாடுகளில் பஹாய்களுக்கு இடமளிக்க மறுப்புத் தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட ஒரு வழக்கின்போது, 1925ல் கீழ்நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பினை உறுதிப்படுத்திய எகிப்தின் உயர்நீதி மன்றம் பஹாய் சமயம், சுதந்திரமானதொரு சமயம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், இஸ்லாமியர்கள் நம்பிக்கைகொள்கின்ற பல்வேறு சிந்தனைப் பள்ளிகளோடு பஹாய் சமயம் போதனைகள் ஒத்துப்போகவில்லை என்றும் அந்நீதி மன்றம் குறிப்பிட்டது..

“முற்றிலும் சுதந்திரமான, ஒரு புதிய சமயமான பஹாய் சமயம், தனக்கென சொந்த நம்பிக்கை, கோட்பாடுகள் மற்றும் சட்டங்களைக் கொண்டுள்ளது. இவை இஸ்லாம் சமய நம்பிக்கை, கோட்பாடுகள் மற்றும் சட்டங்களுக்கு முற்றிலுமாய் மாறுபட்டிருக்கிறது. எனவே, ஒரு பஹாய் முஸ்லிமாகவோ ஒரு முஸ்லிம் பஹாயாகவோ கருதப்பட முடியாது. அவ்வாறே, புத்த சமயத்தவரோ பிராமணரோ கிறிஸ்தவரோ ஒரு முஸ்லிமாகக் கருதப்பட முடியாது. மாறாக, ஒரு முஸ்லிமை புத்த சமயத்தவர், பிராமணர் அல்லது கிறிஸ்தவர் எனக்கொள்ள முடியாது.

பஹாய் மற்றும் இஸ்லாமிய சபை இரண்டுமே பஹாய் சமயத்தை இஸ்லாத்தின் ஓர் உட்பிரிவாகக் கருதவில்லை.