ஆதாரங்களும் தீர்க்கதரிசனமும்
பஹாய்களும் முஸ்லிம்களும் கடவுளின் ஒருமையில் நம்பிக்கைக்கொள்வதால் பெரும்பாலான சமயங்களிலுள்ள கடவுளின் போதனைகளில் பல ஒற்றுமைகள் இருப்பதைக் காண்பதில் கடவுளின் ஒருமையில் இருக்கின்ற நம்பிக்கையாளர்க்கு வியப்பொன்றுமில்லை. கடவுளைப்பற்றி அறிந்திடவும் அவரது நோக்கம் மற்றும் திட்டத்தை நாம் அறிந்திட உதவுவதற்காகவே எல்லா சமயங்களும் வந்துள்ளன. ஒருவர் மற்றவரோடு சமாதானமாகவும் சகோதரத்துவத்தோடும் வாழ்வது என்பதையும், நாம் நம்மை எவ்வாறு சீர்படுத்திக்கொள்வது என்பதையும் நமக்குப் போதிப்பதற்காகவே அவை யாவும் வந்துள்ளன.
விமோசனத்திற்கான வாக்குறுதி, சமயத்தின் மறுபுதுப்பிப்பு மற்றும் இரட்சிப்பு, வாக்களிக்கப்பட்டவரின் வருகையின் மூலம் “கொடுங்கோன்மை நிறைந்த இவ்வுலகில் நீதியை நிலைநாட்டிடுவதும்”, (அல்லது கிருஸ்தவ கலைச்சொற்படி சுவர்க்கத்தில் இருப்பது போலவே இப்பூமியிலும் கடவுளின் இராஜ்யத்தை நிர்மாணித்திடுவது) பெரும்பாலான சமயங்களில் காணப்படும் பொதுவான கருப்பொருளாகும். ஒவ்வொரு குழுவினரும் இந்த வாக்களிக்கப்பட்டவரை, “அல்-மஹ்டி” (வழிகாட்டப்பட்டவர்), “அல்-கயிம்” (எழும்பிடும் ஒருவர்), “ஷஹிபுல் ஜமான்”(காலத்தின் பிரபு), சைனியங்களின் பிரபு எனும் வெவ்வேறு நாமத்தால் அழைத்திடுகின்றனர். கிருஸ்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையினை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பது போல முஸ்லிம்களுக்கும் இயேசுவின் மறுவருகை உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மற்ற சமயத்தவர்களும் தாங்கள் அறிந்துள்ள வேறுபட்ட நாமங்களில் வாக்களிக்கப்பட்டவரின் வருகைக்காக எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
எல்லா சமயங்களும் போலி இறைத்தூதர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. அவை “டஜ்ஜால்” (பொய்யன், தவறாக வழிநடத்திடும் ஒருவன்) குறித்தும் எச்சரிக்கின்றன. ‘கிருஸ்துவெதிரி’ குறித்தும் எச்சரிக்கின்றன.
ஆகவே, பொய் மற்றும் போலித்தனம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டை ஒருவர் எவ்வாறு அறிந்துகொள்வார்? நாமே சுயமாகக் கண்டுகொள்ள விடப்பட்டுள்ளோமா? இறைத்தூதராகக் கோரிக்கொள்ளும் அனைவரையுமே நிராகரித்திடுவது பாதுகாப்பான ஒரு நடவடிக்கையாக இருந்திடுமா?
போலி இறைத்தூதர்கள் குறித்த எச்சரிக்கையே உண்மையான ஒருவர் மெய்யாகவே தோன்றிடுவார் என்பதை நமக்குத் தெரிவிப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. (இருப்பினும் அவரை அறிந்துகொள்வது அத்துணை சுலபமல்ல). இல்லாவிடில், இப்படிப்பட்ட மகிழ்ச்சியான செய்தி குறித்து எச்சரிக்கை விடுக்கப்படாவிடில் அல்லது அடையாளங்களும் சான்றுகளும் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருந்திடுமாயின் போலி இறைத்தூதர்கள் உண்மையான இறைத்தூதார்கள் போன்று ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுவேலை செய்ய சாதகமாகிவிடும். முதலாவது பட்சத்தில் ஒருவர் வரப்போவதையே எதிர்ப்பார்த்திடாத அவர்கள் முயற்சியை செய்திடவே மாட்டார்கள்.
கடவுளின் வழிகாட்டுதலைப் பெற நாம் முயன்றிடுவோமாயின் மற்றவர்களால் தவறாக வழிநடத்தப்படாமலிருக்க அவரது அருளிரக்கம் நம்மைப் பாதுகாத்திடும் என கடவுள் நமக்குக் கூறுகின்றார்:
“மேலும், நம்மை அறிந்துகொள்ள கடுமையாக முயற்சிப்பவர்களுக்கு, நாம் நிச்சயமாக நாம் விரும்பியவாறே அவர்களுக்கு வழிகாட்டிடுவோம்; அல்லா நிச்சயமாக நல்லது செய்பவர்களுடனேயே இருப்பார்.”
- குர்’ஆன் 40:5
போலி இறைத்தூதர்கள் குறித்து தமது சீடர்களை எச்சரிக்கை செய்த இயேசு, உண்மைக்கும் போலியான இறைத்தூதர்களின் கூற்றுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை கண்டுகொள்ள அவர்களுக்கு உதவிட ஓர் அடிப்படைத் தத்துவத்தினை வழங்கியுள்ளார்:
“போலி இறைத்தூதர்கள் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் . . . நல்ல கனிகளைத் தந்திடாத ஒவ்வொரு மரமும் வெட்டி வீழ்த்தப்பட்டுத் தீயிலிடப்படும். ஆகவே, அவர்களின் கனிகளைக் கொண்டே அவர்களை யாம் அறிந்திடுவோம்.”
(மாத். 7:15 – 20)
அது போலவே, திருக்குர்’ஆனிலும் நாம் காண்கிறோம்:
“ஒரு நல்ல வார்த்தையைக் கடவுள் எதற்கு ஒப்பிட்டுள்ளார் என காண முடிகிறதா? ஒரு நல்ல மரத்திற்கு அதனை ஒப்பிட்டுள்ளார். அதன் வேர் (பூமியில்) உறுதியாக ஊன்றியுள்ளது, அதன் கிளைகள் விண்ணைத் தொடுகிறது: எல்லாப் பருவங்களிலும் கனி கொடுக்கின்றன.”
- குர்’ஆன் 14:24: