இஸ்லாம், கடவுளுக்குக் கீழ்ப்படியும் சமயம்.

எவனாவது இஸ்லாம் தவிர்த்து வேறொரு சமயத்தை விரும்பிடுவானாயின், அவ்வாறு அவன் நடந்துகொள்வதை அஃது ஏற்காது; அதன் பிறகு அவன் (எல்லா ஆன்மீக நன்மைகளையும்) இழந்த ஒருவனாக ஆகிடுவான்.

-குர்’ஆன் 3:85

இந்த வசனம் [3:85] பிரபலமான அறிஞர் (அப்துல்லா) யூசுப் அலி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இவ்வசனம் குறித்த அவரது விளக்கவுரையில் (குறிப்பு : 418) திரு. யூசுப் அலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“முஸ்லிம்களின் நிலை தெளிவாக உள்ளது. ஒரு முஸ்லிம் தனக்கு மட்டுமே உரிய ஒரு சமயத்தைக் கொண்டுள்ளதாகக் கோரிக்கொள்ளமாட்டான். இஸ்லாம் ஒரு சமய உட்பிரிவோ ஓர் இனத்திற்கு மட்டுமே உரிய சமயமோ அல்ல. அதன் பார்வையில், உண்மை ஒன்று என்பதால், எல்லா சமயங்களும் ஒன்றே. முன் தோன்றிய எல்லா இறைத்தூதர்களாலும் போதிக்கப்பட்ட சமயமும் இதுதான். அகத்தூண்டலைப் பெற்ற எல்லாப் புனித நூல்களிலும் போதிக்கப்பட்ட உண்மை இதுவே. அல்லாவின் விருப்பம் மற்றும் திட்டத்தினை அறிந்திடுவதோடு, அந்த விருப்பம் மற்றும் திட்டத்திற்குக் களிப்புடன் கீழ்ப்படிய வழிகோலிடுவதுமே அதன் சாரமாகும். இதனைத் தவிர்த்து வேறொரு சமயத்தை ஒருவன் விரும்பிடுவானாயின் அல்லாவின் விருப்பம் மற்றும் திட்டத்திற்குத் துரோகம் இழைப்பதால், அவனுக்கும் அவன் துரோகம் செய்துகொள்கிறான். அவன் வேண்டுமென்றே வழிகாட்டுதலை மறுத்திடுவதால், அப்படிப்பட்ட ஒருவன் வழிகாட்டுதலை எதிர்பார்த்திட முடியாது.”

புனித குர்ஆனில் உள்ள பல வசனங்கள் இஸ்லாம் என்பதன் பொருள் கடவுளின் ஒரே சமயம் என விளக்குகின்றன. இஸ்லாம் முகமதுத்துவம் அல்ல. பெயரால் அது முஸ்லிம்களின் சமயமாக இருப்பினும் அது கடவுளுக்குக் கீழ்ப்படியும் ஒரு சமயமாகும்.


“எந்த சமயத்தின் மூலம் கடவுளது வலிமையின் உள்ளாற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டு, அவரது இறைமை நிறுவப்பட்டதோ அந்த சமயத்தின் உண்மையினை உறுதியாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டிடப்போகிறீர். ஆனந்தத்தில் பிரகாசித்திடும் முகங்களுடன் அவர்பால் விரைந்திடுங்கள். இதுதான் கடவுளின் மாற்றமில்லா சமயம், கடந்தகாலத்தில் நித்தியமானது, எதிர்காலத்திலும் நித்தியமானது. அதனைத் தேடிடுபவன் அடைந்திடுவான்; அதனைத் தேட மருத்திடும் ஒருவனுக்கு – உண்மையிலேயே, தன்னிறைவுமிக்க இறைவன், தம் படைப்பின் எந்த ஒரு தேவைக்கும் மேலானவர்.”

பஹாவுல்லா